நியூயார்க், செப்.7:  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த அரையிறுதிப்போட்டியில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் வெற்றிபெற்று, 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப்போட்டிகள் நேற்றிரவு நடைபெற்றது. இதில் உலக தரவரிசை 2-வது இடத்தில் உள்ள நட்சத்திர வீரர் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபனில் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் நடால். இதன்மூலம், ரோஜர் பெடரருக்குப் பிறகு ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2-வது வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றுள்ளார்.
முன்னதாக, நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வேதேவ், பல்கேரிய வீரர் டிமிட்ரோவை 7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில், நாளை மறுநாள் (செப்.9) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், நடால்- மெத்வேதேவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் – நடால்:
இறுதிப்போட்டி குறித்து நடால் கூறுகையில், இறுதிப் போட்டியில் என்னை எதிர்த்து விளையாடும் மெத்வேதேவ் சவாலாக இருப்பார். எனவே, நான் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என தெரிவித்தார்.