சென்னை, செப். 9: தொற்றுநோய்களான டெங்கு, மலேரியாவை தடுப்பதற்கு லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் தொற்று நோய் பரவாமல் தடுக்க உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ஆய்வு செய்து குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுக்கள் எங்கு மழை பெய்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

மேலும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போதுமான அளவு மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்து 346 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தற்போது டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. தொற்றுநோய்கள், டெங்கு மற்றும் மலேரியாவை தடுப்பதற்கு லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது உடனடியாக தமிழகத்தில் தொடங்கப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது’ என்றார்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட டெங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர்கள் வெளியிட்டனர். ஆய்வுக்கூட்டத்துக்கு முன்னதாக டெங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும், சென்னை பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சுகாதார தூதுவர்களுக்கான அடையாள அட்டையினை அமைச்சர்கள் வழங்கினார்.