அரியானா, செப். 9: பிஜேபியின் 100 நாள் ஆட்சியில் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன என்று அரியான மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்மோடி பிரச்சாரம் செய்தார். அரியானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பிஜேபிஆட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவு செய்கிற தருணத்தில் அரியானா மாநிலத்துக்கு நான் வந்திருக்கிறேன்.இந்த 100 நாட்கள் வளர்ச்சி, நம்பிக்கை, மிகப்பெரிய மாற்றங்களின் நாட்கள். இந்த 100 நாட்கள் தீர்க்கமானவை, அர்ப்பணிப்பும், நல்ல நோக்கமும் கொண்டவையாக அமைந்தன. இந்த நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் பின்னால் 130 கோடி இந்திய மக்களும் அளித்த ஊக்கம் இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவால்தான், நாடு விவசாயத் துறை தொடங்கி தேசிய பாதுகாப்பு வரை முக்கிய முடிவுகள் எடுக்க முடிந்தது. பயங்கரவாத தடுப்பு, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிற நோக்கத்தில் பல்வேறு துறைகளுக்கு உதவுகிற விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. வங்கித்துறையை பலப்படுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது ஆரம்பம்தான். இனி வரும் காலத்தில் இதன்பலன்களை அனுபவிக்க முடியும்.ஒரு பெரிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அனைத்து துறை நடவடிக்கை களையும் எடுக்கிறோம். பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 7 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர். மிகக்குறைந்த காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நாங்கள் ரூ.21 ஆயிரம் கோடி செலுத்தி இருக்கிறோம். விரைவில் வணிகர்களுக்கும், சிறு கடைக்காரர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

நாட்டை இஸ்ரோ திட்டம் தட்டி எழுப்பி உள்ளது. சந்திரயான்-2 விண்கல திட்டத்தால் நாடு ஒன்றுபட்டுள்ளது. நாடு இப்போது வெற்றி, தோல்விக்கு அப்பால் பார்க்கத் தொடங்கி உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.