மீண்டும் முருகதாசுடன் இணையும் ரஜினிகாந்த்

சினிமா

சென்னை, செப். 9: தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு தீவிரஅரசியலில் நுழைவதற்குள் படங்களை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்தநிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் அஜித்தை வைத்து விசுவாசம் படத்தை கொடுத்த சிறுத்தை சிவா சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டது. கிராமத்து பின்னணியில் ரஜினி படம் நடித்து நீண்ட நாட்கள் ஆனதால் இந்த படம் முழுநீள கிராமத்து கதையாக ஆக்ஷன் சென்டிமெண்ட் கலந்து சிவா உருவாக்கி வருகிறார். இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற ஏற்கனவே அவர் ஒப்பு கொண்டு விட்டதால் இந்த படத்தை தொடங்க ரஜினியிடம் 6 மாதகால அவகாசம் கேட்டுள்ளார் சிவா.

இந்நிலையில் தர்பார் படத்தை இயக்கி வரும் முருகதாசின் ஒர்க் ஸ்டைல¢ ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டது. மேலும் படப்பிடிப்பின் போது முருகதாஸ் கூறிய அரசியல் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டது. சிவா படத்தில் நடிக்க 6 மாத காலம் ஆகும் என்பதால் அதற்குள் முருகதாசுடன் இணைந்து இந்த படத்தில் நடித்து விடலாம் என ரஜினி முடிவெடுத்துள்ளார்.
ஏற்கனவே ரஞ்ஜித் இயக்கத்தில் கபாலி, காலா என அடுத்துடுத்து 2 படங்களில் ரஜினி நடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு இறுதியில் அரசியலுக்கு வர உள்ளதால் அதற்குள் இந்த 2 படங்களிலும் நடித்து முடித்து விட ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.