ஆண்டிகுவா, செப்.10:  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கான கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) கிரிக்கெட் அணியில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜாசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி-20 போட்டிக்கு பிராத்வெயிட் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தனர். ஜாசன் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ், நடந்தமுடிந்த உலகக்கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அதே தலைமையே நீடிக்கப்பட்டது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட விண்டீஸ் வெற்றி பெறவில்லை. இவ்வாறு, தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், அந்த அணியின் தலைமையை (கேப்டன்களை) மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

அதன்படி, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். விண்டீசுக்காக கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடியிருந்தார், பொல்லார்ட். அதன்பின்னர், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அத்துடன், டி-20 போட்டிக்கும் அவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடருக்குத்தான் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது, கவனிக்கத்தக்கது.