சென்னை, செப்.10: சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த பீகாரை சேர்ந்த ஷேக் அசுத்துல்லா என்ற தீவிரவாதியை மத்திய, மாநில போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.  அசத்துல்லா (வயது 35) பீகாரை சேர்ந்தவர். 2013-ம் ஆண்டு பீகார் புத்தகயாவில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர். அவருடைய கூட்டாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.அவர்கள் இந்திய முஜாகதின் அமைப்பை சேர்ந்தவர்கள்.

இவர்களுடன் நெருக்கமான ஷேக் அசத்துல்லா போலீசாரிடம் பிடிப்படாமல் சென்னையில் பதுங்கியிருந்தார். அவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.  பீகாரில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்து இருக்கிறார், இதனை தொடர்ந்து அவரை தீவிரவாத தடுப்பு போலீசாரும், உளவுத்துறையினரும் தேடி வந்தார்கள். அவர் சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் துரைப்பாக்கம், அண்ணாநகர் முதல் தெருவில் பதுங்கியிருந்த அசத்துல்லாவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார்கள்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். புதுடெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னை வருகிறார்கள். அசத்துல்லாவை கைது செய்து மேல் விசாரணைக்காக டெல்லிக்கு கொண்டு செல்கிறார்கள்.