சென்னை, செப்.10: கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். சென்னை கோட்டை அருகே உள்ள அன்னை சத்தியா நகர் ஆட்டோ ஸ்டான்டில் உள்ள ஒரு ஆட்டோவில் கஞ்சா வைத்து விற்பனை நடப்பதாக பூக்கடை துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், தனிப்படை போலீஸ் எஸ்.ஐ. பொன் பாண்டியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோட, ஒருவரை மட்டும் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 40 கஞ்சா பொட்டலங்கள், ரூ.3,650 பணம், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றொருவர் காலடிப்பேட்டை பகுதியில் நள்ளிரவே போலீசாரிடம் சிக்கினார். அவர், பார்த்திபன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று செங்குன்றத்தில் கஞ்சா விற்ற பெரோஸ்கான் (வயது 23), இளையகுமார் (வயது 30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ எடையுடைய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.