குண்டூர், செப்.11: தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாக கூறி, அக்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் இன்று குண்டூர் மாவட்டத்தில் பேரணியை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. குண்டூரில் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தெலுங்கு தேசம் கட்சியினரை தாக்கியதைக் கண்டித்து இந்த பேரணிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.

குண்டூரில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்திரபாபு நாயுடுவின் வீட்டை நோக்கி சென்ற கட்சித் தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் அவர்கள் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டனர்.
மேலும் சட்டனபள்ளி, பல்நாடு, நரசராவ்பேட்டா உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.