சென்னை, செப்.11: ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் இன்று மீண்டும் இருவழியில் போக்குவரத்து துவங்கியது.

மெட்ரோ ரெயில் பணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. சில இடங்களில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சில இடங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. இதற்காக அண்ணா சாலையில் இருந்து எல்.ஐ.சி.யில் இருந்து ஸ்பென்சர் வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகிய சாலைகள் வழியாக அண்ணா சாலையை சென்றடைந்தன.

அண்ணா மேம்பாலத்தில் இருந்து சிம்சன் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதேபோல நந்தனம்,தேனாம்பேட்டை பகுதியிலும் அண்ணா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக அந்தப் பகுதியை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.

மெட்ரோ ரெயில் பணிகள் முற்றுப்பெற்றதை தொடர்ந்து சாலையில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழியில் போக்குவரத்து துவங்கியது. சென்னை அண்ணா தபால் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் எல்ஐசி, டிவிஎஸ், ஆயிரம் விளக்கு வழியாக நேராக சென்றன. சென்னை மாநகர பேருந்துகள் 52 வழித்தடங்களில் இன்று முதல் நேராக சென்றன.

மொத்தம் 2963 பயண நடை இருக்கும் என்று சென்னை மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனர் கணேசன் தெரிவித்தார். ஒருவழிப்பாதையாக ஜெனரல் பேட்டர்ஸ் சாலை மீண்டும் இருவழிப்பாதையானது. அதே போல மணிக்கூண்டில் இருந்து ஒயிட்ஸ் சாலையும் இருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது