சென்னை, செப்.11: சென்னை திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சூரை மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

திருவொற்றியூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள சூரை மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திருவொற்றியூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அதிமுக செயலாளர் வி அலெக்சாண்டர் எம்.எல.ஏ முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

மீனவர்களுக்கு நல்ல விஷயங்களை அம்மாவின் அரசு எப்போதும் செய்து கொண்டே இருக்கிறது. 1991ல் மீன்வளத்துறைக்கு பட்ஜெட்டில் மூன்று கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு மீனவர்கள் மேல் அம்மாவின் அரசு அக்கறையோடு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 570 விசைப்படகுகள் நிறுத்துவதற்கு முதலில் கட்டப்பட்டது.

ஆனால் இன்று 2000 விசைப்படகுகளும் சிறிய படகுகள் நிற்பதால் அங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தாலும் நெருக்கடி தீரவில்லை. இதனால் திருவொற்றியூர் பகுதியில் இந்த மீன்பிடி துறைமுகம் அமைவதால் 20 கிராம மக்களின் கனவு திட்டம் நிறைவேற போகிறது.

தமிழகத்தில் பிடிக்கப்படும் மீன்கள் தான் மிகவும் சுவையானதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நமக்கு இந்த மீன் விற்பனை மூலம் 5,000 கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது. புதிய மீன்பிடி துறைமுகம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். தொலைநோக்கு திட்டத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் பணி முடிவடையும் என பேசினார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குனர் சமீரான், மாவட்ட கலெக்டர் ஆர் சீதாலட்சுமி மாவட்ட அதிமுக செயலாளர் வி அலெக்சாண்டர் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே குப்பன், மாவட்ட பொருளாளர் ப.ராஜேந்திரன், இலக்கிய அணி சிவில் முருகேசன், பரமசிவம், கே சி சந்திரன், பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன், முன்னாள் மண்டல குழு தலைவர் தன ரமேஷ் சூர்யா, தொழிலதிபர் கே.கார்த்திக் சரவணன், வட்டச் செயலாளர் எஸ்.சங்கர், கே மோகன் லயன் வீரகுமார் உட்பட ஏராளமான மீனவர்கள், கிராம நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.