சென்னை, செப்.11: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்தேறியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). கார் டிரைவரான இவர், நள்ளிரவு 12.15 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். வீட்டின் அருகே நடந்து சென்றவரை, எதிரே வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்தது. அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதில், பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தென்னக ரெயில்வே யூனியன் ஒன்றின் பொதுச்செயலாளராக இருந்த வில்லிவாக்கம் பாட்டையா தெருவை சேர்ந்த புதியவன் (வயது 51) என்பவரிடம்தான் பாஸ்கர் முதலில் கார் டிரைவராக இருந்துள்ளார். அப்போது, தனது தம்பிக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தர வேண்டி புதியவனிடம் கேட்டதுடன், அதற்காக, ரூ.5 லட்சம் பணமும் கொடுத்துள்ளார், பாஸ்கர்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட புதியவன் வெகு நாட்களாகியும் வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த பாஸ்கர், தனது நண்பருடன் சேர்ந்து புதியவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2019 பிப்ரவரியில் நடந்த இந்த கொலையில், பாஸ்கர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் இந்த கொலை நடந்தேறி இருப்பதால், புதியவனின் கொலைக்கு பழித்தீர்த்துக்கொள்ளதான் அவரது உறவினர்கள் பாஸ்கரை கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் மர்மகும்பலை வில்லிவாக்கம் போலீசார் தேடிவந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சுபாஷ், சுதன், கேசவமூர்த்தி, ஜெபஸ்டீன் என்பதும், முன்விரோதம் காரணமாக பழித்தீர்த்து கொள்ளவே பாஸ்கரை கொலை செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.