ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

அரசியல்

சென்னை, ஏப்.11:
அமைச்சர் வேலுமணி பற்றி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதே சமயம் வேலுமணியின் மனுவுக்கு 16-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறும் ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உள்ளாட்சித் துறை முறைகேடுகள் குறித்தும், பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம்  சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார். எனவே, தன்னைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரியும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரியும் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் பிரச்சார கூட்டங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கைதான் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

பின்னர், பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். மேலும், இம்மனுவுக்கு வரும் 16ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.