சென்னை, செப்.11: கடந்த 5-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி மற்றும் குற்றாளத்திற்கு சுற்றுலா சென்ற கார் டிரைவர் ஒருவர், காருடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் சுந்தர். இவர், சொந்தமாக கார் வைத்துள்ளார். பல்வேறு டிராவல்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள இவர், டிராவல்ஸ் நிறுவனம் கேட்டுக்கொள்ளும் அடிப்படையில், தனது காரினை சுற்றுலாவிற்கு அனுப்பிவைப்பது வழக்கம்.

சுந்தரின் கார் டிரைவராக நாகநாதன் (வயது 54) என்பவர் வேலை பார்த்துவருகிறார். டிராவல்ஸ் நிறுவனம் கேட்டுக்கொள்வதன் அடிப்படையில் கார் எங்கே சென்றாலும், நாகநாதன்தான் அதன் டிரைவராக உடன் செல்வார். இதனிடையே, நுங்கம்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்று கேட்டுக்கொண்டதன் பேரில், சுந்தர் தனது காரினை சுற்றுலாவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
அதன்படி, கடந்த 5-ம் தேதி திருச்சி மற்றும் குற்றாலத்திற்கு 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகநாதன் காரினை ஓட்டிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து, தினந்தோறும் போன் செய்து, தான் எந்த இடத்தில் உள்ளேன் என்ற விவரங்களை சுந்தருக்கு தெரியப்படுத்திவந்துள்ளார், நாகநாதன். அதன்படி, கடந்த 7-ம் தேதி சுந்தருக்கு போன் செய்து பேசிய நாகநாதன், 8-ம் தேதி சுற்றுலா முடிந்து, தான் ஊர் திரும்பி விடுவதாக கூறியுள்ளார். ஆனால், இரு நாட்களாகியும் நாகநாதன் சென்னைக்கு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அணைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கார் என்னானது? அதில் சென்ற சுற்றுலா பயணிகளும் என்ன ஆனார்கள்? என எந்தவொரு விவரமும் தெரியாததால், அதிர்ச்சியடைந்த சுந்தர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள அசோக் நகர் போலீசார், மாயமான டிரைவர் நாகநாதன் மற்றும் காரினை தேடிவருகின்றனர். சுற்றுலா சென்ற டிரைவர், காருடன் மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும். சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.