பிகாம் படிப்புக்கு இனி கலந்தாய்வு நடைபெறும்

சென்னை

சென்னை,செப்.11: பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு நடப்பது போன்று இனி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  கலை அறிவியலை பொறுத்தவரையில் அந்தந்த கல்லூரிகள் தனித்தனியாக அவர்களுக்கான இடங்களை நிரப்பி கொள்வதற்கான கலந்தாய்வுகள் நடத்துகின்றன. ஒருசில கல்லூரிகளில் கலந்தாய்வு நடத்தும் முறை கூட இல்லாமல் மாணவர்களை நேரடியாக சேர்க்கும் சூழல் நிலவுகிறது. முக்கியமாக கலை, அறிவியல் படிப்புகளை பொறுத்தவரையில் ஒவ்வாரு கல்லூரிக்கும் மாணவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

மாணவர்கள் இரண்டு கல்லூரிக்கோ அல்லது ஒரு கல்லூரிக்கோ விண்ணப்பித்தால் எந்த கல்லூரியிலும் அவர்களுக்கு இடம் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இது தலைமைச் செயலாளர் தலைமையில்நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனை செயல்படுத்த தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.