தர்மசாலா, செப்.11:  இந்தியா அணியுடனான கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர் ஏனோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட முதல் போட்டி வரும் 15-ம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்க உள்ளன. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் இல்லாததால், இந்த தொடருக்கு குவிண்டன் டி காக் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்று முன் தினம் இந்தியா வந்தடைந்தது.
இந்த நிலையில், இந்த தொடர் குறித்து தென்னாப்பிரிக்க அணியின் இயக்குநர் ஏனோக் கருத்து தெரிவிக்கையில், இந்திய தொடருக்கு எங்களிடம் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.

இந்தத் தொடர் தென்னாப்பிரிக்க அணியை எதிர்காலத்தில் கட்டமைப்பதற்கு ஒரு முக்கியமானதாக அமையும். டூ பிளசிஸ் ஒரு சிறப்பான வீரர். அவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். எனினும் அணியின் எதிர்காலத்தை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதாலேயே டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடருக்கு வந்துள்ள வீரர்களில் டி காக் அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அவருடன் அணியில் நம்பிக்கை நிறைந்த சில இளம் வீரர்கள் உள்ளனர். ஆகவே இந்தத் தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடுவோம். இந்தத் தொடரை கைப்பற்றுவதே எங்களின் லட்சியம் என்றார்.
உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்து கடும் விமர்சனத்திற்கு ஆளானதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கும் முதல் தொடராக இது அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.