துபாய், செப்.11:  ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் 9 அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தாண்டு ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) அறிவித்தது. ஐசிசி. கால்பந்து லீக் ஸ்டைலில் இதனை வடிவமைத்துள்ளனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். இறுதியில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021-ம் ஆண்டு ஜூலையில் நடக்கும் டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப் போட்டியில் மோதுவார்கள். இதில் 27 தொடர்கள் 71 போட்டிகள் அடங்கும். தற்போதைய நிலவரப்படி, புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிக்கண்டு 120 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று 2-வது மற்றும் 3-வது இடத்திலும். ஆஸ்திரேலியா 4 போட்டியில் 2 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் 56 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து அணி 4 போட்டியில் 1 வெற்றி, 1 டிரா, 2 தோல்வியுடன் 32 புள்ளிகள் பெற்று 5-வது இடம் பிடித்துள்ளது.

புள்ளிப்பட்டியல் கணக்கீடு எப்படி?
இரண்டு போட்டிகளில் கொண்ட தொடரில் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள், டை-க்கு 30 புள்ளிகள், டிராவுக்கு 20 புள்ளிகள் என பிரித்துள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் எனில் வெற்றிக்கு 40 புள்ளிகள், டை-க்கு 20 புள்ளிகள், டிராவுக்கு 13 புள்ளிகளும் வழங்கப்படும். நான்கு போட்டிகள் கொண்ட தொடராக இருப்பின் வெற்றிக்கு 30 புள்ளிகள், டை-க்கு 15 புள்ளிகள், டிராவுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக இருக்கும் பட்சத்தில் வெற்றிக்கு 24 புள்ளிகள், டை-க்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 8 புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் தான் இரண்டு வெற்றி, ஒரு ட்ரா என இருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு 56 புள்ளிகளும், இரண்டு வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 120 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.