திருவள்ளூர், செப். 11: கிராமப் புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அறிமுகம் குறித்த கருத்தரங்கம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கிராமப் புறங்களில் தொழில் முனைவோர்கள், நுண் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் உருவாக்கும் ஓர் முன்னோடித் திட்டமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறதுஎன்று தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் தலைமை செயல் இயக்குநர் கார்த்திகா தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, கிராமப் புறங்களில் உள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில்களில் ஈடுப்படுத்தி தொழில் முனைவோர்களை கண்டறிவதுடன் தொழில் செய்ய தகுந்த சூழலை உருவாக்கி நிதி வசதிகள் ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாக கொண்ட திட்டம் என்றும், இதன் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தி நிறுவனங்கள், தொழில் முனைவோர் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதுடன் அதற்கேற்ற பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டம் திருவள்ளுர் மாவட்டத்தில் முதற் கட்டமாக கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் கடம்பத்தூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.