புதுடெல்லி, செப்.11: இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு பெட்ரோலியப் பொருள்களை எளிதில் எடுத்துச் செல்லும் விதமாக அமைக்கப்பட்ட குழாயை பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தனர். பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதிக்கும், நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதிக்கும் இடையே 69 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியக் குழாய் அமைக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. பெட்ரோலியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இரு நாடுகளுக்கிடையே குழாய் அமைக்கும் திட்டம், தெற்காசிய நாடுகளிலே இதுவே முதலாவதாகும்.

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது இத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. 30 மாதங்களில் இதை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 15 மாதங்களிலேயே இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், நேபாளத் தலைநகர் காத்மாண்டில் பிரதமர் கே.பி. சர்மா ஓலியும் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தனர்.

அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: – இரு நாடுகளுக்கிடையேயான உறவென்பது, இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை நேபாள பிரதமருடன் இணைந்து விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஆர்வத்துடன் உள்ளேன்.

இருநாட்டு அரசுகளும், மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் முனைப்புகாட்டி வருகின்றன. அவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென்பதில், இருநாட்டு அரசுகளும் உறுதிகொண்டுள்ளன. பெட்ரோலியக் குழாய் திட்டமும் திட்ட மிடப்பட்ட காலத்துக்கு முன்கூட்டியே நிறை வேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.