புதுடெல்லி, செப்.11: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி,புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தனக்கு 14 நாட்கள் சிறை காவல் அளித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்,தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ப. சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 5ம்தேதியன்று தன்னை, 14 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே,ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வெளிநாட்டு மூலதனத்திற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளை கைது செய்யவேண்டாம் என்று சிதம்பரம் சார்பில் டிவிட்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் வேண்டுகோளை ஏற்று, அவரது குடும்பத்தினர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதனால், ஏழை மக்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகளும் ,வர்த்தகமும் குறைந்துள்ளது. மூலதனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று ப.சிதம்பரம் வெளியிட்டுள் டுவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார். வீழ்ச்சிஅடைந்து வரும்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.