ஜெயசித்ரா மகத்தான நடிகை: சிவகுமார் புகழாரம்

சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ‘புதிய ராகம்’ என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். இந்நிலையில், ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கும் வகையில் அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் ஏற்பாடு செய்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகுமார், நடிகை சௌகார் ஜானகி, பாடலாசிரியர் சினேகன், நடிகை நமீதா அவரது கணவர்வீர், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சாய்ராம், லக்ஷ்மன், நேக் ஸ்டுடியோவின் கல்யாணம், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நடிகர் சிவகுமார் பேசும்போது:- என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார்.

சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை. நான் அவரை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன் என்றார்.