ஸ்ரீநகர், செப்.12: ஜம்மு காஷ்மீரில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இதன் மூலம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5-ந்தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் தரை வழி தொலைபேசி சேவைகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன. செல்லிட பேசி மற்றும் இணைய தள சேவைகளுக்கான தடை மட்டும் தொடருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊடுருவி இருக்கலாமென தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்திருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ஏகே 47 ரக தானியங்கி துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி ஒன்று சிக்கியதாக கத்துவா எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.

அந்த ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பயங்கர ஆயுதங்களுடன் லாரி சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க பாகிஸ்தான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதால் தீவிரவாதிகளை களத்தில் இறக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் எல்லைப் பகுதியில் மேலும் தீவிர ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரமுல்லா மாவட்டத்தில் சோர்போர் பதுங்கிய தீவிரவாதிகளை கண்டுபிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு தீவிரவாதி கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோட முயன்றான். இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் உயிரிழந்தான். இவன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி என தெரியவந்துள்ளது.