யூனியன் வங்கியின் புதிய திட்டம் துவக்கம்

சென்னை

சென்னை,செப்.12: யூனியன் பேங்க் ஆப் இந்தியா நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி `கோ கிரீன்’ என்னும் பசுமைக்கு செல்லுங்கள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. கார்பன் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த நடவடிக்கையை வங்கி மேற்கொண்டுள்ளது. `கோ கிரீன்’ திட்டத்தை நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்கிரண் ராய், சென்னை பிராட்வேயில் உள்ள கள பொது மேலாளர்கள் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே அதிக அளவிலான மரங்களை வளர்த்து தூய்மையான காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும் என்பதோடு இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்பது ஆகும். இதன் ஒரு பகுதியாக யூனியன் பேங்க் பவன் வளாகத்தில் மரங்கள் நடும் திட்டத்தை நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்கிரண் ராய், கள பொது மேலாளர் லால் சிங் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை அலுவலக வளாகங்கள் மற்றும் வீடுகளில் நட்டு இயற்கையை போற்றி பாதுகாக்குமாறு வலியுறுத்தப்பட்டது.