கிள்ளை சின்னவாய்க்கால்முகத்துவாரம் தூர்வாரப்படும்

தமிழ்நாடு

சிதம்பரம், செப்.12: சிதம்பரத்தை அடுத்த கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தினை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கூறியுள்ளார். கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவார பகுதியை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தெரிவிக்கையில், தற்போது சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்ந்து போனதால் இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட முடசல் ஓடை முகத்துவாரம் அல்லது பழையார் முகத்துவாரங்களை பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதனால் மீனவர்களுக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் கால விரயம் ஏற்படுவதோடு எரிபொருளுக்காக அதிக அளவு பொருள் விரயம் ஏற்படுகின்றது. ஆதலால் சின்னவாய்க்கால் முகத்துவாரத்தினை ஆழப்படுத்திட வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையினை சட்டப்பேரவையில் நான் கேள்வியாக எடுத்துரைத்த போது மீன்வளத்துறை அமைச்சர் சின்னவாய்க்கால் முகத்துவாரம் உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆய்வின் போது கிள்ளை நகர செயலாளர் விஜயன், மாவட்ட துணை செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, நிர்வாகிகள் தமிழரசன், கலையரசன், பொன்னுசாமி, பரமதயாளன், கிள்ளை மீனவ கிராம தலைவர் கவியரசன், செயலாளர் வீரதமிழன், சின்னவாய்க்கால் மீனவ கிராம தலைவர் கோவிந்தன், செயலாளர் மூர்த்தி, பட்டறையடி மீனவ கிராம தலைவர்கள் சரவணன், கிஷோத், ஜோதிமணி, பிள்ளுமேடு மீனவ கிராம தலைவர்கள் ஜெயபால், மணிகண்டன் மற்றும் மீனவ கிராம மக்கள் உடன் இருந்தனர்.