சென்னை, செப்.12: ‘தர்பார்’ திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றும், படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்றும் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் ‘தர்பார்’. மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் பனியனுடன் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல் காணப்படுகிறது. இந்த படம் தற்போது அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’தர்பார்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்றும், படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

செகண்ட் லுக் போஸ்டரில் 2020 பொங்கலுக்கு தர்பார் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.