சென்னை, செப்.13: எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிமுகவினர் கட்அவுட் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிமுக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் தலையாய கடமையாக இருந்திடல் வேண்டும்.

அதிமுக நிகழ்ச்சிகளுக்கோ, கழகத்தினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கழகத்தினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும் போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், ஃபிளக்ஸ் போர்டுகள் (பேனர்) வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும்; கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.