சென்னை, செப்.13: இன்னும் நிறைய சிலைகள் மீட்கவேண்டி உள்ளது என்றும் அனுமதி அளித்தால் அனைத்தும் மீட்கப்படும் என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 700 ஆண்டுகளுக்குமுன்னர் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட குலசேகரமுடையார் கோயில் அமைந்துள்ளது. இங்கிருந்து 1982-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி இந்த கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் விநாயகர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல்  தலைமையிலான போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை குறித்து விசாரணை நடத்தினர். திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம்  ஆஸ்திரேலியா அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஸ்திரேலியா நாட்டிற்கு  சென்று அந்நாட்டின் அருங்காட்சிய பதிவாளர் ஜேன் ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடம் நடராஜர் சிலையை பெற்றனர்.

அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, டெல்லியில் இருந்து ரெயில் மூலம் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மீட்டுக் கொண்டுவரப்பட்ட நடராசர் சிலையை தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்து தரிசித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அளித்த பேட்டியில், கடத்தப்பட்ட சிலைகள் பல இடங்களுக்கு போய் வந்துள்ளது. வழக்கு, விசாரணையில் இருப்பதால் அதை சொல்லமுடியாது. சிலையுடன் சேர்ந்து கலாச்சாரம், கலைநயம் மிக்க 50-க்கும் மேற்பட்ட தூண்கள் திருடு போய் உள்ளது.

எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. நாம் வணங்கும் சிலை வெளிநாடுகளில் காட்சி பொருளாக இருக்க கூடாது. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது என்றார்.