விழுப்புரம் செப்.13: விழுப்புரம் அருகே பெண் பார்க்க சென்றபோது கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த டிரைவர் உட்பட இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேம்பாலத்தில் ஏற முயன்ற போது திருப்பத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்த போது இந்த விபத்து நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக ஈரோட்டிற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்காக செஞ்சி அம்மா குளம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது கார் தியாகதுருகம் புறவழி சாலையில் விருகாவூர் செல்லும் சாலை மேம்பாலத்தில் ஏறும் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென காரின் டயர் வெடித்து பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே செஞ்சி அம்மா குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஏழுமலை (வயது 50), மாரி மகன் பாலாஜி (வயது 36) கிருஷ்ணன் மனைவி சித்ரா (வயது 40), ஏழுமலை மனைவி ஜெயக்கொடி (வயது 44) ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கார் ஓட்டுனர் சிவகுமார் மற்றும் சாந்தி (வயது47) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த இரண்டு பேரை கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இறந்துபோன 4 உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தியாகதுருகம் காவல் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.