ராஞ்சி, செப்.13:  இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ஓய்வு குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மனைவி சாக்ஷி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் என்னால் மறக்க முடியாத போட்டி என்று குறிப்பிட்டு தோனியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 உலகக்கோப்பை காலிறுதியில் விளையாடிய ஆட்டத்தை நினைவு கூர்ந்து இருந்தார். அத்துடன், ஸ்பெஷல் நைட் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த டிவிட் வைத்து தோனி ஓய்வு பெறலாம் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு 7 மணிக்கு தோனி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தோனியின் மனைவி சாக்ஷி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தோனியின் ஓய்வு குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என பதிவிட்டுள்ளார். இதனால் தோனியின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். முன்னதாக, தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பின்போது, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், தோனியின் ஓய்வுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.