சென்னை, செப்.13: தமிழகத்தில் காசநோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தை பார்வையிட்டு, நோய்க்கான புதிய கூட்டு மருந்து சிகிச்சை மாத்திரைகளை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் காசநோய்கான மருந்து மாத்திரைகளை பயனாளிகளுக்கு வழங்கி அமைச்சர் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் 764 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஊசி மருந்துகள் மூலம் குணப்படுத்தப்பட்டு வந்த முறை தற்போது வலியில்லாமல், மருத்துவ பணியாளர் உதவியின்றி எளிதாக உட்கொள்ளும் முறை ஆகும்.

இந்த புதிய கூட்டு மருந்து கிசிச்சை மாத்திரைகள் அனைத்து மாவட்ட காசநோய் மையங்களிலும் கிடைக்கும் இதன் மதிப்பு ரூ.61,000/- அரசு மருத்துவ மனைகளில் கட்டணமில்லாமல் வழங்கப் படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் குணமாவதுடன் பொது மக்களுக்கு பரவுவதும் தடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 35 மாவட்ட காசநோய் மையங்கள், 461 காசநோய் அலகுகள் 1984 நுண்ணோக்கி ஆய்வுக்கூட மையங்கள் உள்ளன. சென்னை, மதுரை ஆகிய இடங்களில் இடைநிலை பரிந்துரை ஆய்வுக் கூடங்கள் உள்ளன.

2030க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை 2025க்கு முன்பாகவே காசநோயை தமிழக மக்களிடமிருந்து முற்றிலுமாக ஒழித்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையத்தால் தமிழ்நாட்டில் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாய நிலையில் உள்ளோரை கண்டறியும் பணி 4.58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மத்திய காசநோய் கூடுதல் இயக்குநர் மரு. நிஷாந்த் குமார், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.