சென்னை, செப்.13: சட்டத்தை விட தன்னை உயர்வாக கருதியவர்கள் இன்று ஜாமீன் கேட்டு அலைகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைதான ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு மனு செய்து இருப்பதை பிரதமர¢ மோடி இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டு பேசி இருப்பதாக கருதப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நேற்று விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து கூறியதாவது:- கடந்த 100 நாட்களில் நாங்கள் வலிமைமிக்க முடிவுகளை எடுத்திருக் கிறோம். சட்டத்தை விட தங்களை உயர்வாக கருதியவர்கள் இன்று ஜாமீன் கேட்டு அலைந்து திரிகிறார்கள். ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை தொடங்கியிருக்கிறது.

இந்த நாட்டை கொள்ளையடித்தவர்கள் அடையாளம் காட்டப்படுகிறார்கள். இப்போது நடப்பது டிரைலர் தான். முழு படம் இனிமேல் தான் வர இருக்கிறது. அரசியலில் பழிதீர்ப்பதற்காக அரசு ஏஜென்சிகளை தவறாக பயன் படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் நடவடிக்கையை தடுக்க முடியாது. மக்களவை தேர்தலில் எனது அரசுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்தார்கள். முத்தலாக் தடை சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370 மற்றும் 35ஏ போன்ற பிரிவுகளை ரத்து செய்தது போன்ற வலிமைமிக்க முடிவுகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக பலம்மிக்க சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் திட்டத்தின் கீழ் 6 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து இருக் கிறார்கள். இவர்களில் 8 லட்சம் பேர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மத்திய அரசின் திட்டங்களின் தொடக்கமே இது. இன்னும் 5 ஆண்டு களில் மேலும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.