சென்னை, ஏப்.11:
சென்னை விமான நிலையத்தில், ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் நிர்வாக கோளாறு காரணமாக முற்றிலுமாக சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் 43 விமானங்களை இயக்கிவருகிறது. அத்துடன், மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து, வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கிவந்தது.

இதனிடையே, நிதி பற்றாக்குறை மற்றும் நிர்வாக கோளாறு காரணமாக கடந்த ஒரு மாத காலமாகவே, குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான சேவை முடங்கியது. இதனையடுத்து, விமானிகளும் சம்பளம் கிடைக்காததால் வேலை நிறுத்ததில் ஈடுபட்டதுடன், பிரமருக்கும் புகார் மனு அளித்திருந்தனர். ஜெட் ஏர்வேஸ் நிர்வாக தலைவர் நரேஷ் கோயலும் தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இதனால், எஞ்சிய பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்துள்ளது. இறுதியாக, விமானங்களை இயக்குவதற்கு தேவையான பெட்ரோலை வழங்குவதை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதனால், சென்னை விமான நிலையத்தில், ஜெட் ஏர்வேஸின் சேவைக்கட்டணம் ரூ.100 கோடிக்கும் மேல் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, இந்திய விமான நிலைய ஆணையமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.