வேலூர், செப்.13: வேலூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 3.36 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பத்திர பதிவு செய்ய புரோக்கர்கள் மூலம் லட்சக் கணக்கில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ள சம்பவம் வேலூர் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் வேலப்பாடியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் புரோக்கர்கள் மூலம் பொதுமக்களிடம் பத்திரப்பதிவு மற்றும் சங்கங்கள் பதிவு செய்வது உள்பட பல்வேறு வகையான பதிவுகளுக்கு பல ஆயிரம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் இன்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், ஆய்வாளர்கள் விஜய், ரஜினி, விஜய லட்சுமி, பிரியா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வேலப்பாடியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் மாவட்ட பதிவாளரின் மேஜை மற்றும் கழிவறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ரூ.3.36 லட்சம் பணம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட பதிவாளர் உள்பட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பொதுமக்களிடம் பத்திர பதிவு கட்டணமாக பெறப்பட்டதா அல்லது கணக்கில் வராத லஞ்ச பணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பத்திரப்பதிவு செய்வதற்கு புரோக்கர்கள் மூலமாக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இன்றுகாலை பத்திர பதிவு அலுவலகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை டநத்தி வருகின்றனர்.