ஆரியா நடிப்பில் கடந்த வாரம் வெளியான மகாமுனி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளவர் ஜிஎம் சுந்தர். இவர் ஏராளமான தமிழ் சினிமாவில், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் நடிப்பில் ரீ எண்ட்ரியாகி உள்ளார். ஜி எம் குமார் தனது அனுபவங்கள் குறித்து கூறியதாவது:- பாலச்சந்தரின் அறிமுகத்தால் கமல் நடித்த ‘புன்னகை மன்னன்’ ‘சத்யா’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தயாரித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு ‘கிழக்குக்கரை’, ‘பொன்னுமணி’, ‘அதர்மம்‘, ‘தொட்டி ஜெயா’ ,’எங்க ஊரு காவல்காரன்’ போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் நடித்தேன்.

பின்னர் ‘காதலும் கடந்து போகும் ‘படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி . ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது ‘மகாமுனி’ படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் . இது எனது சமீபத்திய சந்தோஷம். இப்போது நான் நடித்து ‘மண்டேலா’ என்ற ஒரு படம் வரவிருக்கிறது. அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார் . ‘சைரன்’ என்ற மற்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.