ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மிருகா’. மேலும் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைகதை எழுதி ஒளிப்பதிவு பொறுப்பையும் எம். வீ பன்னீர்செல்வம் மேற்கொண்டுள்ளார்.இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை அமைக்கின்றனர். அருள் தேவ் இசை அமைத்திருக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பார்த்திபன், கதை எழுதி உள்ள பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’. இதில் ஸ்ரீகாந்தும், ராய் லக்ஷ்மியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது.