பாரிஸ், செப்.14: வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது 2016-ம் ஆண்டு தெரியவந்தது.

சுமார் ரூ.13 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த விசாரணையில் கூகுள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வரி ஏய்ப்புக்கான அபராத தொகை ரூ.3 ஆயிரத்து 933 கோடி மற்றும் வரி பாக்கி தொகை ரூ.3 ஆயிரத்து 659 கோடி ஆகியவற்றை செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.