பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருடன் சந்திப்பு

சென்னை

சென்னை,செப். 14: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புக்கான பூர்வாங்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.  பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிகிறது. தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதிகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மாமல்லபுரத்துக்கு வந்தனர். அவர்கள் பிரதமர் மோடியும் சீன அதிபரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்க இருக்கும் திருவிடந்தை ஹெலிபேடு பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தலைவர்கள் காரில் செல்லும் பாதை, அவர்கள் தங்கும் இடம், கடற்கரை கோயிலை பார்வையிடும் பகுதி, நவீன ரேடார்கள் அமைக்க வேண்டிய இடங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்தனர். விரைவில், சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்புப் படையினரும் மாமல்லபுரத்துக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளதாகத் தெரிகிறது. மாமல்லபுரத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசுத் துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.