சென்னை, செப்.14: சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கடும் கண்டனத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. சட்டவிரோத பேனர்களை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக தொடர்கிறது. துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பெண் பொறியாளர் சுபஸ்ரீ மீது பேனர் சரிந்து அவர் கீழே விழுந்த போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த போது பேனர்கள் வைப்பதை தடை செய்து 8 முறை உத்தரவு பிறப்பித்தும் பின்பற்றாதது குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பேனர்கள் வைக்க கூடாது என்பதை தொண்டர்களுக்கு வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணி நேற்று மதியமே தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், 15 மண்டல பொறியாளர்களையும் அழைத்து தனி நபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனர்களை அகற்றுமாறு உத்தரவிட்டார். இதையடுதது மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு தெருத்தெருவாக சென்று பேனர்களை அகற்றி வருகின்றார்கள்.

தீவுத்திடல், லாயிட்ஸ் ரோடு, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன. அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் ஆகிய புறநகர் பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்பட்டன. இதேபோல் மதுரை, விருதுநகர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் பேனர்களும், கட் அவுட்களும் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் இன்று வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. ஈரோட்டில் சட்டவிரோத பேனர்கள் வைத்ததாக 44 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 ஆயிரம் பேனர்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன. அடுத்த சில நாட்களில் பேனர்கள் இல்லா தமிழகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.