புதுடெல்லி, செப்,14: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் குடும்பத் தினருக்கு 317 வங்கி கணக்குகள் இருப்பதாகவும், அவரது 22 வயது மகள் தனது பெயரில் ரூ.108 கோடி பணப்பரிமாற்றம் செய்து இருப்பதாகவும் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு வரும் 17-ந் தேதி வரை காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரை 5 நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹார் முன்னிலை யில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது சிவகுமார் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு 22 வங்கிகளில் 317 கணக்குகள் இருப் பதை கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்தனர். அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை தவறாக பயன்படுத்தி சிவகுமார் பெரிய அளவில் பணம் சேர்த்ததாகவும், ரூ.200 கோடிக்கும் அதிகமாக நிதிமோசடி செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகுமாரின் 22 வயது மகள் தனது பெயரில் ரூ.108 கோடி பண பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், இது போன்ற குற்றச் சாட்டுகள் குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது என அமலாக்கத்துறை சார்பில் தெரிவித்தனர்.

இதற்கு சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். தனது கட்சிகாரர் உடல்நலமில்லாதவர் என்றும், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் கூறினார்.
இதையடுத்து சிவகுமாரை தினமும் அரை மணி நேரம் அவரது குடும்ப மருத்துவரும், குடும்பத்தினரும் சந்திப்ப தற்கு நீதிபதி அனுமதியளித்தார்.