ஓவல், செப்.14:  நேற்று நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்ததன்மூலம், இங்கிலாந்துக்கு எதிராக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதன்மூலம், பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையையும் ஸ்மித் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களிலேயே சுருண்டது. வழக்கம்போல், ஸ்டீவன் ஸ்மித் மட்டும் தனி ஒருவனாக போராடி அரைசதம் (80) கடந்தார். இவரை தொடர்ந்து அதிகபட்சமாக மார்னஸ் 48 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

நடப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஸ்மித், இந்த போட்டியிலும் தனது நிலையான ஆட்டத்தை தொடர்ந்தார். சதத்தை தவறவிட்டாலும், 80 ரன்கள் குவித்து அரைசதம் கடந்தார் ஸ்மித். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் (9 முறை) சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். அத்துடன், ஒரு அணிக்கு (இங்கிலாந்து) எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

ஆறு விக்கெட் வீழ்த்தி ஆர்ச்சர் அபாரம்:
இந்த போட்டியில், இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது. தொடக்கவீரர்கள் டேவிட் வார்னர் (5), மார்கஸ் (3), மார்னஸ் (48), மிட்செல் மார்ஷ் (17) என முக்கிய தலைகள் தொடங்கி, பீட்டர் (18), நாதன் லயன் (25) என ஒருவரையும் விட்டுவைக்காமல் விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரமுடிவில் 4 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்தது. ரோரி பர்ன்ஸ் (4), ஜோ டென்லி (1) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு 3-வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.