கஜகஸ்தான், செப்.14:  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள நூர் சுல்தானில் இன்று தொடங்குகிறது.

செப். 22-ம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில், ஆண்களுக்கு பிரீஸ்டைல் மற்றும் கிரிகோ ரோமன் பிரிவுகளிலும், பெண்களுக்கு பிரீஸ்டைல் பிரிவிலும் போட்டிகள் நடைபெறுகிறது. இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 30 எடைப்பிரிவுகளில் பந்தயங்கள் அரங்கேறுகிறது. இதில், 20 வீரர்கள், 10 வீராங்கனைகள் என இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் குறிப்பிட்ட 18 எடைப்பிரிவுகளில் முதல் 6 இடத்தை பிடிப்பவர்கள் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்களது கோட்டாவை உறுதி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் பஜ்ரங் பூனியா, சுஷில்குமார், வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களிடம் இருந்து இந்தாண்டும் சிறப்பான பங்களிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.