லண்டன், ஏப்.11: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

47 வயதாகும் அசான்ஜே விக்கி லீக்ஸ் எனும் புலனாய்வு செய்தி நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். அமெரிக்க அரசின் பல ரகசிய தகவல்களை வெளியிட்டதற்காக அசான்ஜேயை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. மேலும் அவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதையடுத்து லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ம் ஆண்டில் தஞ்சமடைந்தார். அப்போது முதல் அவர் அங்கேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த மெட்ரோ பாலிட்டன் போலீஸ் சேவை அதிகாரிகள் தூதரகத்துக்கு வந்து அசான்ஜேயை கைது செய்தனர்.

அடைக்கலம் கொடுப்பதை ஈக்வடார் நாடு விலக்கிக்கொண்டதையடுத்து லண்டன் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் போலீசுக்கு தகவல் சொல்ல போலீஸ் அவரை கைது செய்துள்ளது.

மத்திய லண்டனில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அசான்ஜே வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.