பீஜிங், செப்.16: உலக கோப்பை கூடைப்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

18-வது உலக கோப்பை கூடைப்பந்து திருவிழா சீனாவில் கடந்த 31-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான அமெரிக்கா, காலிறுதியுடன் வெளியேறியது. 69 ஆண்டுகால உலக கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் அமெரிக்காவின் மோசமான செயல்பாடாக இது அமைந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-அர்ஜென்டினா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, முதல் பாதியில் 43-31 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றதுடன், கடைசி வரை அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.

அதன்படி, ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 95-75 என்ற புள்ளி கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்னர், 2006-ம் ஆண்டில் அந்த அணி பட்டம் வென்று இருந்தது, குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 67-59 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.