சென்னை, செப்.16: சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததையடுத்து. அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போரூரை அடுத்த முகலிவாக்கம் சுபஸ்ரீ நகர் 4-வது விரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு வனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். முதல் மகன் தீனா (வயது 14) 9-ம் வகுப்பு படித்துவந்துள்ளான்.

இந்த நிலையில், தனது வாகனத்திற்கு பெட்ரோல் வாங்குவதற்காக, மகன் தீனாவை வீட்டின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அனுப்பிவைத்துள்ளார், செந்தில். இதற்காக, தீனா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு தேங்கியிருந்த மழைநீரில் தீனா எதிர்பாரதவிதமாக கால்வைக்க, உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட தீனா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. தகவலறிந்துவந்த தீனாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள். மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலேயே தீனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டிய அவர்கள், மவுண்ட்-போரூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில், கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம், சரிவர மூடாததினாலேயே, மேலே எம்பிக்கொண்டிருந்த மின்வயர் தேங்கியிருந்த மழைநீரில் நனைந்து அந்த நீரில் மின்சாரம் பாய்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்கிறது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்துவந்த மாங்காடு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி-க்கு அனுப்பிவைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அண்மையில், டி.பி.சத்திரத்தில் இதேபோன்று, மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானது, குறிப்பிடத்தக்கது.