மும்பை, செப்.16:  தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டங்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரையடுத்து. பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தனது விசாரணையை தொடங்கியிருக்கிறது.

8 அணிகள் பங்கேற்ற டி.என்.பி.எல் டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில், சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், டி.என்.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றிருப்பதாக பிசிசிஐ-க்கு புகார் வந்துள்ளது. வீரர்கள் தரப்பில் இந்த புகார் பிசிசிஐ-க்கு சென்றதாக தெரிகிறது. அதன்படி, இந்திய வீரரும், ஐபிஎல் குழுவை சேர்ந்தவரும் மற்றும் ராஞ்சி தொடரின் பயிற்சியாளர்களில் ஒருவருமான ஒரு முக்கிய நபருக்கு இதில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கியிருக்கிறது. ஆனால், இதில் அணியின் வீரர்களுக்கு மட்டுமே தொடர்பிருப்பதாக கூறப்படுவதால், அணியின் உரிமையாளர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றும் தகவல் கூறப்பட்டுள்ளது.