சென்னை, செப். 16: தமிழக ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். தென்னிந்தியாவின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் “காவிரி கூக்குரல்’ இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் காவிரி நதிப் படுகையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிடப் பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் இரு மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ஆம் தேதி சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கினார். கர்நாடகத்தில் இருந்து ஒசூர் வழியாக தமிழகம் வந்தடைந்த இந்தப் பேரணி, தருமபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாகநேற்று சென்னையை வந்தடைந்தது.

இதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- ஈஷா அறக்கட்டளையின் 242 கோடி மரம் நடும் திட்டம் வரவேற்கத்தக்கது. அந்த அமைப்பின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கும். தமிழகத்தில் மழை நீர் சேமிப்பு திட்டம் போன்று மரம் வளர்க்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் பல்லுயிர் காத்தல், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் மாசுகளை அகற்றுதல், காவிரி நகர்ப்புற கழிவுநீரை சுத்திகரிக்கத் தேவையான சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல், ஆற்றுப் படுகையில் மரங்களை நட்டு வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள “நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை செயல்படுத்த பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்தேன்.திட்டத்தைப் பாராட்டி இதே போன்று நாட்டிலுள்ள ஜீவநதிகளில் செயல்படுத்த குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது உரையில் இந்தத் திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் .

இதேபோன்று தமிழகத்திலுள்ள பவானி, வைகை, அமராவதி, தாமிரவருணி ஆறுகளும் மாசுபடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். தற்போது வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.24.58 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று பாலாறுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் 2019-2020-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அதனைத்தொடர்ந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , ஜி.கே. வாசன் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிஉட்பட பலர் பங்கேற்று பேசினர்.