திருப்பூர், செப். 16: திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் என்று பேசியது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:- ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன்.
இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜயபிரபாகரன், துணை செயலாளர் சுதீஷ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சியின் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், திருப்பூரில் இன்று(நேற்று) நடக்கும் முப்பெரும் விழா ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நிர்வாகிகள் பேனர், கட்-அவுட்டுகளை சொந்த செலவில் மாநகரில் வைத்திருந்தனர். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக அந்த பேனர், கட்-அவுட்டுகளை எடுத்து ரோட்டில் வீசியதாக சொன்னார்கள். கோர்ட்டு உத்தரவை மதிக்கும் கட்சி தே.மு.தி.க. தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவராக விஜயகாந்த் இருப்பார். விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மலர்ந்தே தீரும். தே.மு.தி.க. எழுச்சி பெற்று மீண்டும் பெரிய சக்தியாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.