புதுடெல்லி, செப்.16: நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு சென்னை உட்பட 11 ரெயில் நிலையங்கள் மற்றும் 6 கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரெயில் நிலையங்கள், கோயில்கள் ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அக்டோபர் 8-ம் தேதி தசரா திருவிழா நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மைசூரிலும், தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நவராத்திரி பண்டிகை மிக விமரிசையாக நடைபெறும்.

நவராத்திரி திருவிழா வருகிற 29-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்து ஆலயங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நவராத்திரி தசரா திருவிழாவை சீர்குலைக்க போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டலை பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடிதம் மூலம் அரியானா மாநில ரெயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளனர். கராச்சியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி மசூத் அகமது என்பவன் பெயரில் அந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு யஷ்பால் மீனா பெயரிட்டு வந்துள்ள அந்த கடிதம் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேவை மூலம் வந்துள்ள அந்த மிரட்டல் கடிதத்தில் ஜெய்ஷ்- இ-முகம்மது பயங்கரவாதிகள் கூறி இருப்பதாவது:-

எங்கள் இயக்கத்தினரை கொன்றதற்காக பழிக்கு பழி வாங்க முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் உள்ள 11 ரெயில் நிலையங்களையும், 6 முக்கிய இந்து ஆலயங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம். அக்டோபர் 8-ந்தேதி இந்தியாவில் தசரா திருவிழா நடைபெறும் போது எங்கள் இலக்கை எட்டுவோம்.

இவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் வந்த இந்த மிரட்டல் கடிதம் பற்றி போலீசார் நேற்று தீவிர விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டனர்.  ரேவாரி, ஹிஸார், குருஷேத்ரா, மும்பை, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், போபால், கோடா மற்றும் இட்ராசி ஆகிய 11 ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாதிகள் கடிதத்தில் எழுதி உள்ளனர். ராஜஸ்தான், குஜராத், தமிழகம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள 6 முக்கிய கோயில்களை தகர்க்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ரோதக் ரெயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் கடித மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ரெயில் பெட்டிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே போல தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டள்ளன. இதனிடையே விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கடற்படை அதிகாரிகள் தென்னகத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். மேலும் கடல் பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.