புதுடெல்லி, செப்.17: பிரதமர் மோடியின் 69-வது பிறந்ததினத்தையொட்டி அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர். அகமதாபாத்தில் தனது 98 வயது தாயார் ஹீராபென்னிடம் மோடி வாழ்த்து பெற்றார்.

69-வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு அகமதாபாத் சென்றார். அவரை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். இன்று காலை அகமதாபாத்தில் வசிக்கும் 98 வயது தாயார் ஹீராபென்னை சந்தித்து அவரது காலைத் தொட்டு வணங்கி மோடி ஆசி பெற்றார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலான மிக்க தலைமை இந்தியா, உலகத்தில் பெரிய வல்லரசாக உருவாவதற்கு அடித்தளம் அமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மகிழ்ச்சிகரமான இந்த பிறந்தநாளில் கடவுள் உங்களை ஆசிர்வதித்து, நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நீண்டகாலம் சேவை செய்ய வேண்டும்’ என வாழ்த்தி உள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியிலும் இதேபோல தெரிவித்துள்ளார்.

இதே போல் காங்கிரஸ் தலைவர் சோனியா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அனுப்பிய வாழ்த்து செய்தியிலும் பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளனர். இந்திய தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய வண்ணம் உள்ளனர்.