திருச்சி, செப். 17: தீ விபத்தில் குடிசை எரிந்து பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நிவாரண உதவி வழங்கினார்கள். திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அய்யாளம்மன் கோவிலுக்கும் செல்லும் வழியில் ஆற்று கரையோரம் வாத்து கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் ரவி. இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டு களாக வாத்து கறிகடையும் நடத்தி வருகிறார். இவரது மகனுக்கு கடந்த 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் அவரது குடிசை வீடு கடந்த 9ம் தேதி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் பொருட்கள் அனைத்து தீ விபத்தில் எரிந்து சேதமானது. இந்த நிலையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நேற்று நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் புதுமண தம்பதிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் நிவாரண உதவிகளை அவர்கள் வழங்கினார்கள். பின்னர், அமைச்சர்கள் இருவரும் தனித் தனியாக புதுமண தம்பதிகளுக்கு தங்களது சொந்த நிதியிலிருந்து நிதி உதவிகளும், பட்டு வேட்டி, சேலைகளையும் வழங்கி னார்கள். இதில் ஸ்ரீரங்கம் தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.