சென்னை, செப்.17: சென்னையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற சென்ற மாநகராட்சி பொறியாளர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை இன்று போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கடந்த ஞாயிற்று கிழமை மதிமுக விழா நடைபெற்றது. இதையொட்டி இந்த மைதானத்தை ஒட்டியுள்ள சாலைகளில் கொடிகள் மற்றும் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி அதிகாரிகளுக்க தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அல்பிஜான் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாகவும், அதைதொடர்ந்து பொறியாளர் கே.வரதராஜனிடம் சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து அந்த இடத்திற்கு பொறியாளர் வரதராஜன் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று சட்டவிரோத பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நான்கு கார்களில் வந்த சிலர் பொறியாளரை சூழ்ந்துக்கொண்டு கடும் வாக்குவாதம் செய்ததாகவும், இதில் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். தாக்குதலுக்கு உள்ளான பொறியாளர் வரதராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு நேற்று டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மதிமுக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொறியாளர் குடும்பத்திற்கு நாங்கள் உதவுவோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வரதராஜன் குடும்பத்தினர் கூறுகையில், மாற்றுதிறனாளியான அவரின் முகத்தில் குத்தி இருக்கிறார்கள். அவரால் பேசமுடியவில்லை என்றனர். மதிமுக மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்று காலை அவரையும், மதிமுக தொண்டர்கள் சிலரையும் கைது செய்தனர். இதை கண்டித்து மதிமுகவின் இன்னொரு மாவட்ட செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் இன்று காலை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பள்ளிக்கரணையில் இளம் பெண் பொறியாளர் சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து அதிகாரிகளுக்கு சட்ட விரோத பேனர்களை அகற்றாதது தொடர்பாக கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என பல்வேறு கட்சி தலைவர்கள் அறிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் பேனர்களை அகற்ற சென்ற பொறியாளர் தாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.